Thursday, June 4, 2020

மீண்டும் அம்மா..


அம்மா..
ஆம்.. இன்னும் ஓரே நாள் தான்
உங்களின் ஓராண்டு நினைவு நாளுக்கு
போன வருடம் இதே நாளில்
உங்களின் கடைசி யாத்திரைக்காக
தயாராகிக் கொண்டிருந்தீர்கள்..
எங்களைப் பற்றி யோசித்திருப்பீர்கள்
எங்களை, நீங்கள் இல்லா வாழ்விற்காக 
தயார் செய்துவிட்டதாய்
எண்ணியிருப்பீர்கள்
ஆனால் அம்மா 
நீங்கள் இவ்வுலகை விட்டு 
சென்ற நாள் முதல் 
இன்று வரை உங்களின் நினைவில்
கண்ணீர் விடாத நாள் இல்லவே இல்லை
என் சுகமும் துக்கமும் இன்றுக்கூட
உங்களிடம் மட்டுமே பகிரப்படுகிறது..
நீங்கள் உடலளவில் எங்களோடு இல்லை
ஆனால் மனம் முழுவதும் உங்களின்
நினைவு மட்டுமே..

அம்மா.. 
முன்பெல்லாம் சாவு என்றால் பயமெனக்கு
ஆனால் இப்போது அந்த பயமில்லை
சொல்லப்போனால் சாவிற்காக காத்து நிற்கிறேன்
மீண்டும் உங்களை பார்ப்பேன் என்பதால்..

மிஸ் யூ அம்மா.. லவ் யு லாட்ட்ட்ட்ட்ட்

Wednesday, June 3, 2020

மனிதம் எங்கே போகிறது???

ஆம்...மனிதம் எங்கே போகிறது?? மனிதனிடம் மனிதம் இல்லை..

இன்று இணையத்தில் கண்ட இந்த படம் என்னை மிகவும் பாதித்து விட்டது.. 

சாப்பிட அன்னாசிப்பழம் தந்திருக்கிறான் மனிதன் என்று தாய் யானை பிள்ளையிடம் சொல்ல மனிதன் எவ்வளவு நல்லவன் என்று பிறவாக்குழந்தை பேரானந்த படுவதாக சித்தரிக்கப்பட்ட படம்...

ஆனால் உண்மையில் என்ன நடந்தது.. இந்த வாயில்லா மிருகங்களை கொல்ல எப்படி மனது வந்தது இந்த கொடிய மனிதனுக்கு..  

அந்த பட்டாசு வெடித்து புண்ணாய் போன வாய் எப்படி வலித்திருக்கும்? அந்த கடைசி நிமிடத்தில் அந்த பிறவாக்குழந்தையை நினைத்து எவ்வளவு துடித்திருக்கும்? மனிதனின் நம்பிக்கை துரோகம் எத்தனை ரணம் தந்திருக்கும்?


சமீபக்காலமாகவே நாய்களுக்கு பாலூட்டும் ஆடு, மின்கம்பியில் தாவத்தெரியாமல் தத்தளித்த குட்டி குரங்கினை காப்பாற்றும் தாய் குரங்கு, கிளியோடு விளையாடும் பூனை இப்படியாக எத்தனையோ வீடியோக்களை கண்டு மகிழுந்த மனதில் இன்றைய இந்த கேரளத்தில் நடந்த சம்பவம் மனதை சிதைத்து போடுகிறது...

எங்கே போகிறது மனிதம்??
யார் காரணம் இன்றைய நிலைக்கு??
படிக்காத ஐந்தறிவு  மிருகங்களை காட்டிலும் படித்த ஆறறிவு மனிதர்கள் மிருகமாக மாறி நிற்கிறார்கள்.. படிப்பு பகுத்தறிவை உண்டாக்குகிறதா அல்லது வேர் அறுத்துப்போடுகிறதா???

இப்படிப்பட்ட மனிதர்கள் இருப்பதை காட்டிலும், இல்லாமல் போவதே மேல்... 

Tuesday, May 26, 2020

கனவுகள்

கனவுகள்.. 


சில கனவுகள் நம்மை சாதனையாளர்களாய் மாற்றும், சில நம்மை சிதைத்துப்போடும். சில கனவுகளோ அர்த்தமற்ற கனவுகளாக இருக்கும், சில கனவுகள் பின் நடக்க போவதை முன் சொல்லுவனவாக இருக்கும்..

வசந்த் அண்ணாவிற்கும் எனக்கும் கனவுகளோடு மிக அதிக தொடர்புகள் உண்டு, குறிப்பாக பின் நடப்பதை முன் சொல்லும் கனவுகள்.

ஒரு சமயம் நான் பள்ளியிலும், வினோ அண்ணா கோவையில் பொறியியல் கல்லூரியிலும், வசந்த் அண்ணா சென்னையில் கல்லூரியிலும் படித்துக்கொண்டிருந்த காலம்.. அப்பா வினோ அண்ணா கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் மீட்டிங் சென்று விட்டு சென்னை திரும்பிக்கொண்டிருந்தார்கள் இரவில் அரசு பேருந்தில். அதே இரவு அம்மா, வசந்த் அண்ணா மற்றும் நான் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தோம்.  தீடிரென்று வசந்த் அண்ணா "பிடிங்க, பிடிங்க, கீழே விழுது பிடிங்க" என்று கத்திக்கொண்டே தூக்கத்திலிருந்து எழுந்து உட்கார்ந்தார்கள். அம்மாவும் நானும் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி மீண்டும் தூங்கச்சென்றோம். காலையில் வீடு திரும்பிய அப்பா, தன் கைக்கடிகாரம் செயின் அறுந்து விட்டது என அம்மாவிடம் கொடுத்தார்கள்.. அம்மா எப்படி என்று கேட்டதற்கு, வாட்ச் கிடைச்சதே பெரிய விஷயம் என்று சொல்லி, அப்பா பேருந்தில் வரும் பொழுது, தன் இடக்கையை தலைக்கு கொடுத்து கம்பியில் சாய்ந்து தூங்கிக்கொண்டு வந்ததாகவும், தீடிரென்று யாரோ "பிடிங்க, பிடிங்க , கீழே விழுது பிடிங்க" என்று கத்தியது போல குரல் கேட்டு விழித்து தன் கையில் வாட்ச் இல்லாததைக் கண்டு, அது அப்பொழுது தான் விழுந்திருக்க வேண்டும் என்று எண்ணி பேருந்தை நிறுத்தி சற்று பின்னே நடந்து வாட்ச்சை எடுத்து வந்ததாகவும் சொல்லி முடித்தார்கள்.. நாங்கள் மூவரும் திகைத்து பின் வீட்டில் நடந்ததை சொல்லி முடித்தோம்.. இதுப்போல் பல சம்பவங்கள் உண்டு வசந்த் அண்ணாவின் கனவை பற்றிச்சொல்ல..

எனக்கோ ஒரு விபரீதமான கனவு அனுபவங்கள் உண்டு.. மனது மிகவும் குழப்பத்தில் இருக்கும் சமயங்களில் சுனாமியும், ஸ்டார் வார்ஸ்களுமாக வரும். மற்றுமொரு வித்தியாசமான கனவு, நான் காண விரும்பாத கனவும் அதன்பின் தொடரும் நிகழ்வுகளும் எப்பொழுதுமே என்னை வருத்தும்..
கனவில் யாருக்காவது திருமணமும், அந்த திருமணத்தில் நான் பல வருடமாக நேரில் சந்திக்காத, ஆனால் மனதுக்கு நெருக்கமான நபருக்கும் என்னோடான உரையாடலும் இருக்கும். காலை எழுந்தவுடன் காரணமே இல்லாமல் கண்ணில் கண்ணீர் நின்றுக்கொண்டேயிருக்கும், ஒருவிதமான தலைவலி, மனதில் ஒரு பெரிய பாரம், யாரோடும் பேசப்பிடிக்காத மனநிலை, இவையனைத்தோடு ஒரு தட்டான்பூச்சியும் (ஆங்கிலத்தில் Moth என்று சொல்வோம்), ஏதோ ஒரு உருவம் என்னை கடப்பது போல நிகழ்வுகளும் இருந்தால் நிச்சயம் அடுத்த இரண்டு நாடகளுக்குள் ஒரு மனதிற்கு நெருக்கமான உறவு இந்த உலகை விட்டு சென்று விடுவார்கள். அந்த இறப்பு செய்திக்குப்பின் தான் என் தலைவலி சரியாகும்.

இப்படியான கனவுகளுக்கு மத்தியில், அம்மாவின் இறப்பிற்குப் பிறகு அந்த இழப்பை தாங்க முடியாத நான் அம்மாவிடம் வேண்டிக்கொண்டது கனவிலாவது என்னோடு கூடே இருங்கள் என்று.. என் வேண்டுதலுக்கு இணங்க அம்மா தினமும் என் கனவில் வந்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்.. அதனால் கனவுக்குள் வாழ பிடித்திருக்கிறது.. 

Sunday, May 24, 2020

அண்ணன்கள்

மே 24 - இன்று சர்வதேச சகோதரர்கள் தினம்வழக்கம் போல காலையில் எழுந்து மொபைல் பார்த்த போது வசந்த் அண்ணனிடமிருந்து வந்திருந்த இந்த படம் தான் சொன்னது இன்று சர்வதேச சகோதரர்கள் தினமென்று..

இந்த தினத்தில் எனக்கு என் அண்ணன்கள் குறித்தான சிறு வயது நினைவுகளை பகிரலாம் என எண்ணினேன்..
இது எனது முதல் பிறந்தநாள் புகைப்படம்.. நிச்சயம் என்னோட அண்ணன்கள் என்னை மிக அன்பாக பார்த்துதான் இருப்பார்கள்.. இந்த புகைப்படத்தை பார்க்கும் போதெல்லாம் இப்படியே இருந்திருக்கலாம் என பலமுறை எண்ணி இருக்கிறேன்..

இதுவும் என் ஒரு வயது காலத்துப் புகைப்படமாக இருக்கலாம்.. அண்ணன்கள் இருவரும் தவழ்ந்து மகிழ்ந்த மடியில் நானும்.. 

நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது எடுத்த புகைப்படம்.. இந்த வயதில் என் அண்ணன்களுடனான உரையாடல்களும், சம்பவங்களும் இன்றும் நீங்கா இடம் பிடித்து இருக்கிறது.. இந்த சமயத்தில் குடும்பத்தில் வறுமை இருந்தாலும் வீட்டில் அன்பிற்கு குறையில்லாமலேயிருந்தது.. 

நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சமயத்தில் பள்ளியில் மதிய இடைவேளைக்கு பிறகு என் வகுப்புக்கு செல்லாமல் அண்ணன்களில் யாராவது ஒருத்தரின் வகுப்பில் அவர்கள் மடியில் தூங்கிக்கிடந்ததே அதிகம்..

பள்ளிக்கூடம் சென்றது ரிக்‌ஷாவில்.. பள்ளி சென்று திருப்பும் வரையில் அத்தனை பொறுப்பாக பார்த்துக்கொண்டார்கள்..

தவறுகள் நான் செய்தாலும் அடி வாங்கியது என்னவோ அவர்கள் இருவரும் தான்.. ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது பள்ளிக்கு நடந்து செல்வது வழக்கம்.. என் இரண்டாவது அண்ணன் வசந்த் கதை சொல்லுவதை கேட்பதே ஒரு படம் பார்ப்பது போல் இருக்கும்.. அப்படி கேட்ட கதைகள்.ஆயிரம்..

பெரிய அண்ணா வினோ.. பாசம் அதிகம் உண்டு ஆனால் அப்பாவை போலவே வெளியில் காட்டத்தெரியாது.. வினோ அண்ணாவின் அன்பு கண்டிப்பில் தெரியும்.. அது இன்றளவும் அப்படியேதான்.. என்னதான் கண்டிப்பாக இருந்தாலும் நாங்கள் மூவரும் சில நேரங்களில் கூட்டு களவாணிகள்.. அதுவும் முக்கியமாக அப்பா அம்மா வெளியில் செல்லும் நாட்களில்.. அன்று தான் வசந்த் அண்ணாவின் சமையல் கலையும், வினோ அண்ணாவின் என்ஜினியர் மூளையும் வெளியே வரும்.. இதனால் காலி ஆவது வீட்டில் உள்ள கோதுமை, அரிசி, மைதா மாவுகளும், அம்மாவில் வாட்ச், பழைய ரேடியோ, மற்றும் சில எலக்ட்ரானிக் பொருட்களும் தான்..
எல்லாவற்றிலும் உடந்தையாக இருப்பவளும் நாந்தான், கடைசியில் அப்பாவின் மிரட்டலில் மாட்டிவிடுபவளும் நானேதான்..

இரு அண்ணன்களுமே பள்ளி, கல்லூரி காலங்களில் எங்கே சுற்றுலா சென்றாலும் அவர்களுக்கு செலவு செய்ய கொடுத்த பணத்தில் எனக்கு ஏதாவது வாங்கிவருவதே வழக்கம்.. நாங்கள் மூவரும் எங்கள் போலீஸ் குடியிருப்பில் பலருக்கு முன்மாதிரி பிள்ளைகள்.. 

வசந்த் அண்ணாவின் பள்ளிச்செல்லும் நேரத்தை பார்த்து தங்கள் வீட்டு கடிகாரத்தில் நேரம் சரி செய்தவர்களும் உண்டு.. வினோ அண்ணாவின் கம்பீரக்குரலே என்னையும் என் தோழிகளையும் எங்கள் குடியிருப்பு இளம் வயது பையன்களின் கண்களில் இருந்து காத்து நின்றது... 

அண்ணன்களின் அத்தியாயம் தொடரும்... சொல்ல நிறையவே இருக்கிறது... இது ஒரு முன்னோட்டமே... அண்ணன்கள் சூழ் தங்கையின் வாழ்க்கை என்றுமே இனிமை தான்... அண்ணன்களின் தங்கை என்றுமே அநாதை ஆவது இல்லை.. 


ஐ லவ் மை பிரதர்ஸ்.. 

Saturday, May 23, 2020

அம்மா..அம்மா... 

அது ஒரு மந்திர சொல். சொல் மட்டுமல்ல அந்த ஒரு வார்த்தை தான் உலகத்தின் மொத்தமும்..

எனக்கு நினைவு தெரிந்த முதல் நாள் எனக்கு அம்மாவை குறித்தான நியாபகம் என்றால் எப்போதும் தவழும் உதட்டோர சிறுப்புன்னகை, சிவந்த நெற்றி பொட்டு, சிவந்த நடு வகிட்டு  குங்குமம், சற்றே பருத்த உடம்பு, பின்னலிட்ட கூந்தல், அந்த கூந்தல் நுனியில் சொட்டும் நீர், அழகாய் மார்பில் தவழ விட்ட புடவை, அதிர்ந்தே பேசாத குரல் தான் நினைவில் இருக்கிறது...

மிக கம்பீரமான போலீஸ்கார அப்பா அருகில் மிக பவ்யமாய், வள்ளுவனின் வாசுகியாய் எப்போதுமே எறும்பை போல் சுறுசுறுப்பாய் தனது 62 வயது வரை ஒடிக்களைத்து போன அம்மா..

அம்மா, திருமணத்திற்கு முந்திய பருவத்தில் அனைவருக்கும்  அன்பான சிநேகிதியாக இருந்திருப்பார்கள்.. புகைப்படங்களிலிருந்தும், அம்மாவின் இளமைக்காலத்தில் கூடே இருந்த என் சித்திகளிடமும், மாமாக்களிடமும், அத்தைகளிடமும், சித்தப்பாக்களிடமும் கேட்டு தெரிந்து கொண்ட வகையில் அம்மா ஒரு ராஜா வீட்டு கன்னுக்குட்டியாகவே வளர்ந்து இருக்கிறார்கள்.. சமையலும், வீட்டு வேலைகளும் செய்ய தெரியாத பெண்ணாகவே இருந்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன்..

அப்பாவுடன் திருமணம் ஆன பிறகே அனைத்தும் கற்றுக்கொண்டிருந்திருப்பார்கள்.. அப்படி கற்றுக்கொண்ட எதிலும் பிழை இருந்ததாக பார்த்ததில்லை.. மூன்று பிள்ளைகளையும் மிகவும் பொறுப்புடனும், அன்புடனும், மற்றவர்களிடம் பண்புடனும் பழகவே கற்றுக்கொடுத்து வளர்த்தார்கள்..

அம்மா.. என்னுடைய பருவ வயதில் எனக்கு ஒரு நல்ல தோழியாகவே இருந்தார்கள்.. அம்மாவிடம் சொல்லாத கதைகள் இல்லை.. நான் சொல்லும் அனைத்து கதைகளையும் இடைமறித்து நிறுத்தியது இல்லை.. முழுவதும் கேட்டு பின் எது நல்லது எது கெட்டது எனப் பகுத்தறிந்து கற்றுக்கொடுத்தார்கள்..

அம்மாவின் இரண்டாம் குழந்தைப்பருவத்தில், உண்மையாகவே குழந்தையாக மாறித்தான் போனார்கள்.. போன வருடம் இந்த நிமிடம் ஒரு கைக்குழந்தையாகவே மாறியிருந்தார்கள்.. அந்த கைக்குழந்தையாக மாறுவதின் முன் பருவத்தில் எங்கள் மூவரின் குடும்ப வாழ்க்கையினை மெல்ல அசைப்போட்டு மூவரும் நல்ல நிலையில் இருக்கிறோம், இனி எங்களால் அம்மா இல்லாமல் வாழ முடியும் என்று எண்ணினார்களோ என்னவோ... மிகவும் சந்தோஷமாக என்னிடம் "எல்லாம் முடிஞ்சுருச்சுடி, எல்லாரும் நல்லா இருங்க, இனி யாருக்கும் நான் தொல்லை தரமாட்டேன்" என்று தனது முழு சுயநினைவோடு சொன்னார்கள்

அதன்பின்னான மருத்துவமனையில் கடைசி பயணக்காலத்திலும் ஒரு சிறுக்குழந்தையினைப்போல் "ஏன் எனக்கு தலை வாராம வச்சுருக்கே, முகம் கழுவி விடு, தலை வாரி விடு, பவுடர் போடு, பொட்டு வச்சுவிடு, துணியை மாற்றிவிடு என்று சிறுக்குழந்தையாகவே மாறிப்போனார்கள்..

அம்மாவின் கடைசி நிமிடம் அவர்கள் தனியாக
பிரிய மனசு இல்லை.. தன் பிள்ளைகள், மருமக்களும் புடை சூழவே இவ்வுலகை விட்டு சென்றார்கள்..

எங்கள் மூவரின் இன்றைய மதிப்பிற்க்கும் மரியாதைக்கும் முழு முதல் காரணம் எங்கள் அம்மா மட்டுமே காரணம்.. உடல் எங்களை விட்டு போனாலும் அம்மா எங்கள் அனைவரோடும் எப்பொழுதும் கூடவே தான் இருக்கிறார்கள்..

எங்களின் வாழ்க்கை பயணம் எங்களின் அறிவை சார்ந்த பயணமாக இல்லை, எங்களின் அம்மாவின் அறிவுரைகளும், அரவணைப்புகளால் மட்டுமே ஆனது...

அம்மா... என்றும் உங்கள் வழியில் நாங்கள் வாழவே ஆசைப்படுகிறோம்.. இன்னொரு ஜென்மம் உண்டெனில் மீண்டும் உங்கள் மடி தவழும் வரம் வேண்டி நிற்கிறோம்..


Friday, May 22, 2020

மீண்டும் நான்..

2013 க்கு பின் நிறுத்திய எழுத்துப்பயணத்தை மீண்டும் துவக்கலாம் என்ற எண்ணத்தில் மீண்டும் நான்...

கடந்த கால தேடல் முடிவடைந்து
புதியதொரு பரிணாமத்துடன்
மீண்டும் நான்..

தேடல் என்றும் முடிவதில்லை
இனி இங்கே வெறும் கவிதைகளல்ல
என் ஒவ்வொரு தேடலின்
விடைகள் பகிரப்படும்..

மீண்டும் நான்
உங்களின் நட்சத்திராவாக
உங்களின் ஆதரவுடன்
உலா வர வாழ்த்துக்காக
வேண்டி நிற்கிறேன்...

Tuesday, August 20, 2013

வரமா? சாபமா?


பெண்ணாக பிறப்பது

வரம்தான் எனயெண்ணி

மகிழ்வாய் வலம் வந்தால்

ஒருசில ஆண்கள்

நட்புத்தோல் போர்த்தி

ஆனந்தத்திற்கு கல்லறை

கட்டி சாபமாக

மாற்றிவிடுகிறீர்களே ஏன்?அவளுக்கென்று மனமில்லையா?

அவள் மனதின் எண்ண

அலைகளை எப்போது

புரிந்துக்கொள்ள

பிரயத்தனமெடுப்பாய் நீ?வாழ்வில் ஏதோ ஒரு

தருணத்தில் அமைதியற்று

ஆறுதல் தேடியலையும்

பெண்ணை நீ

புரிந்துக்கொள்ளாவிடினும்

பரவாயில்லை

புரிந்துக்கொண்டேன்,

உன் வாழ்வில் ஆறுதலாகவும்

துணையாகவுமிருப்பேன் -

நல்ல தோழனாக!

ஆனால் பதிலுக்கு என்

உணர்வுகளுக்கு

வடிக்காலாய்

நீயிரு என

கேட்காமலாவது இரு..

தோழன் என்ற

தோலைப் போர்த்திக்கொண்டு

திரியும் காமுகனாக

இருக்காதே....