Tuesday, May 26, 2020

கனவுகள்

கனவுகள்.. 


சில கனவுகள் நம்மை சாதனையாளர்களாய் மாற்றும், சில நம்மை சிதைத்துப்போடும். சில கனவுகளோ அர்த்தமற்ற கனவுகளாக இருக்கும், சில கனவுகள் பின் நடக்க போவதை முன் சொல்லுவனவாக இருக்கும்..

வசந்த் அண்ணாவிற்கும் எனக்கும் கனவுகளோடு மிக அதிக தொடர்புகள் உண்டு, குறிப்பாக பின் நடப்பதை முன் சொல்லும் கனவுகள்.

ஒரு சமயம் நான் பள்ளியிலும், வினோ அண்ணா கோவையில் பொறியியல் கல்லூரியிலும், வசந்த் அண்ணா சென்னையில் கல்லூரியிலும் படித்துக்கொண்டிருந்த காலம்.. அப்பா வினோ அண்ணா கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் மீட்டிங் சென்று விட்டு சென்னை திரும்பிக்கொண்டிருந்தார்கள் இரவில் அரசு பேருந்தில். அதே இரவு அம்மா, வசந்த் அண்ணா மற்றும் நான் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தோம்.  தீடிரென்று வசந்த் அண்ணா "பிடிங்க, பிடிங்க, கீழே விழுது பிடிங்க" என்று கத்திக்கொண்டே தூக்கத்திலிருந்து எழுந்து உட்கார்ந்தார்கள். அம்மாவும் நானும் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி மீண்டும் தூங்கச்சென்றோம். காலையில் வீடு திரும்பிய அப்பா, தன் கைக்கடிகாரம் செயின் அறுந்து விட்டது என அம்மாவிடம் கொடுத்தார்கள்.. அம்மா எப்படி என்று கேட்டதற்கு, வாட்ச் கிடைச்சதே பெரிய விஷயம் என்று சொல்லி, அப்பா பேருந்தில் வரும் பொழுது, தன் இடக்கையை தலைக்கு கொடுத்து கம்பியில் சாய்ந்து தூங்கிக்கொண்டு வந்ததாகவும், தீடிரென்று யாரோ "பிடிங்க, பிடிங்க , கீழே விழுது பிடிங்க" என்று கத்தியது போல குரல் கேட்டு விழித்து தன் கையில் வாட்ச் இல்லாததைக் கண்டு, அது அப்பொழுது தான் விழுந்திருக்க வேண்டும் என்று எண்ணி பேருந்தை நிறுத்தி சற்று பின்னே நடந்து வாட்ச்சை எடுத்து வந்ததாகவும் சொல்லி முடித்தார்கள்.. நாங்கள் மூவரும் திகைத்து பின் வீட்டில் நடந்ததை சொல்லி முடித்தோம்.. இதுப்போல் பல சம்பவங்கள் உண்டு வசந்த் அண்ணாவின் கனவை பற்றிச்சொல்ல..

எனக்கோ ஒரு விபரீதமான கனவு அனுபவங்கள் உண்டு.. மனது மிகவும் குழப்பத்தில் இருக்கும் சமயங்களில் சுனாமியும், ஸ்டார் வார்ஸ்களுமாக வரும். மற்றுமொரு வித்தியாசமான கனவு, நான் காண விரும்பாத கனவும் அதன்பின் தொடரும் நிகழ்வுகளும் எப்பொழுதுமே என்னை வருத்தும்..
கனவில் யாருக்காவது திருமணமும், அந்த திருமணத்தில் நான் பல வருடமாக நேரில் சந்திக்காத, ஆனால் மனதுக்கு நெருக்கமான நபருக்கும் என்னோடான உரையாடலும் இருக்கும். காலை எழுந்தவுடன் காரணமே இல்லாமல் கண்ணில் கண்ணீர் நின்றுக்கொண்டேயிருக்கும், ஒருவிதமான தலைவலி, மனதில் ஒரு பெரிய பாரம், யாரோடும் பேசப்பிடிக்காத மனநிலை, இவையனைத்தோடு ஒரு தட்டான்பூச்சியும் (ஆங்கிலத்தில் Moth என்று சொல்வோம்), ஏதோ ஒரு உருவம் என்னை கடப்பது போல நிகழ்வுகளும் இருந்தால் நிச்சயம் அடுத்த இரண்டு நாடகளுக்குள் ஒரு மனதிற்கு நெருக்கமான உறவு இந்த உலகை விட்டு சென்று விடுவார்கள். அந்த இறப்பு செய்திக்குப்பின் தான் என் தலைவலி சரியாகும்.

இப்படியான கனவுகளுக்கு மத்தியில், அம்மாவின் இறப்பிற்குப் பிறகு அந்த இழப்பை தாங்க முடியாத நான் அம்மாவிடம் வேண்டிக்கொண்டது கனவிலாவது என்னோடு கூடே இருங்கள் என்று.. என் வேண்டுதலுக்கு இணங்க அம்மா தினமும் என் கனவில் வந்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்.. அதனால் கனவுக்குள் வாழ பிடித்திருக்கிறது.. 

No comments: