Friday, August 28, 2009

காக்கும் கேடயம்....


இறைவா
இன்னல்களுடன்
இரைஞ்சுகிறேன் - நான்
கேட்கும் நல்லவற்றைத்தான் - நீ
கேட்டும் கேட்காததுப்போல்
கொடுக்க நேரமெடுத்துக்கொள்கிறாய்
கோபத்தையாவது சீக்கிரம்
கொடு என்னை
காயப்படுத்துபவர்களிடமிருந்து என்னை
காக்கும் கேடயமாக இருக்கட்டும்....

Thursday, August 6, 2009

என்ன நட்பு இது!!!


என்ன நட்பு இது!!!
காதலைவிட மிக கொடியதாய்
நித்தம் நித்தம் ஒரு தேடலுடன்
அதிகமதிகமாய் எதிர்ப்பார்ப்புடன்...

எனக்கு உன் நட்பு புரியவில்லையா
இல்லை உனக்கு என் நட்பு புரியவில்லையா
புரிதலில்தானேயுள்ளது நட்பு
அது நமக்கும் தெரியுமே...

பின்பு ஏன் இந்த கண்ணாமூச்சி???
எது எப்படியாவது இருக்கட்டும்..
உன்மீதான நட்பு நிரந்தரமானது
என் நலன் கருதி நீ விலகிநின்றால்
அது நட்பாகாது.. எந்த சூழ்நிலையிலும்
விலகாமலிருப்பதே தூயதொரு நட்பு

இதை நீ உணரும் காலம் தூரமில்லை
நட்பே...நீ உணரவில்லை என்பதும்கூட
பொய்தான்..உணரமறுக்கிறாயென்பதே
நிதர்சனமான உண்மை!!!

நீ வரும் காலமட்டும் உனக்காக
நம் நட்பின் இனிமையான
காலங்களை மனதிலிருத்தி நினைவுகளோடு
கைக்கோர்த்து தனிமையில் நடப்பேன்...

உன்வரவுக்குப்பின் இந்த உலகம்
வியக்க நமைமறந்து
இந்த உலகுக்கு சத்தமிட்டு
சொல்லுவோம் நம் நட்பின் இனிமைகளை....

Thursday, July 9, 2009

பிழையான கவிதை...


நான் பிழைகள்
நிறைந்த கவிதை
என்பதால்தான் எனை
படிக்காமலே குப்பையில்
எறிந்தாயோ???

என்ன செய்வேன்
எனை எழுதியவனுக்கு
பிழையின்றி எழுத
தெரியவில்லையே!!

Wednesday, July 1, 2009

என்னுள்ளே என்னுள்ளே....




1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது?

மரியா என்பது அன்னை மரியாவின் பெயர்... மெர்லின் என்பது.... அர்த்தம் எனக்கு தெரியவில்லை... (யாரச்சும் தெரிஞ்சா சொல்லுங்க) எனக்கு அந்த பேரு வச்சது ஒரு குருவானவர்... ஒரு வேளை அவர் அந்த காலத்தின் முன்னனி நடிகை மெர்லின் மன்றோவை நினைத்து வைத்திருக்கலாம்... :) :) வித்யா - எங்க வீட்டுல எல்லாருக்கும் ஆங்கில எழுத்து 'வி' யில் தான் பெயர்.. வினோத், வசந்த்... அதனால் எனக்கு வித்யா...

நட்சத்திரா - எனக்கு நட்சத்திரங்கள் மேல கொஞ்சம் அதிகமாவே காதலுண்டு...

உங்களுக்கு இந்தப் பெயர் பிடிக்குமா?

என்னோட எல்லா பெயருமே எனக்கு ரொம்பவே பிடிக்கும்...


2. கடைசியாக அழுதது எப்பொழுது?

பொதுவா எனக்கு அழுறது பிடிக்காது....

முடிந்த வரை சின்னதா ஆரம்பிச்சு பெரிய புன்னகையில் சமாளிப்பேன்... :)

மனதுக்கு பிரியமானவர்களின் பிரிவு அழ வைக்கும்...அப்படி யாரையும் சமீபத்தில் இழக்கவில்லை...:) :)

3. உங்களுடைய கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?

ரொம்பவே பிடிக்கும்.... தமிழ் கையெழுத்தை விட ஆங்கில கையெழுத்து அழகாயிருக்கும்...

4. பிடித்த மதிய உணவு என்ன?

பருப்பு சாதம், உருளைக்கிழங்கு வறுவல், அவியல், நான் சமைக்கும் சிக்கன், அப்புறம் அப்பளம்....

5. நீங்கள் பார்த்தவுடன் யாருடனாவது உடனே நட்புக் கொண்டாடக் கூடியவரா?

பார்த்தவுடன் நட்பு...இல்லை... ஆனால் ஒரு சிலருடன் கொஞ்சம் பேசினாலும் மனதில் ஒரு நம்பிக்கை வரும்... அப்படிப்பட்டவர்களுடன் நட்பை தொடருவேன்... எந்த காரணத்துக்காகவும் அவர்களை என் வாழ்நாளில் இழக்க மாட்டேன்...

6. கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

பொதுவாவே தண்ணிரைப்பார்த்தாலே மனசுக்கு சந்தோஷம் வந்திரும்... நீச்சல் தெரியாது அதனால் கடலில் கால் நனைக்கப்பிடிக்கும்..அருவியில் முழுதும் நனையப்பிடிக்கும்... மேலிருந்து விழும் தண்ணீர் நம் தலைத்தொடுமுன் ஒரு புத்துணர்ச்சி வந்திருமே.... அந்த சுகத்துக்கு ஈடு இணையேது???

7. முதலில் ஒருவரைப் பார்க்கும்போது எதனைக் கவனிப்பீர்கள்?

கண்களைத்தான்....கண்கள் சொல்லும் ஒருவரின் மனதின் உண்மையான எண்ண ஓட்டத்தினை...
அப்புறம் கை மற்றும் கால் நகங்கள்... அவை உடலின் சுத்ததினை பிரதிபலிக்கும்...


8. உங்களிடம் உங்களுக்குப் பிடித்த விடயம் என்ன? பிடிக்காத விடயம் என்ன?

பிடித்தது - எப்போதும் புன்னகையுடன் இருப்பது.... யாரையும் எந்த காரணத்திற்காகவும் காயப்படுத்தாமலிருப்பது... வெறுக்கத்தெரியாத மனது.... என்னுடைய சிரிப்பும், குரலும்...

பிடிக்காதது - ரொம்ப சீக்கிரம் காயப்பட்டுக்குவேன்.... பல நேரங்களில் அதற்கு காரணம் நானாகவேயிருப்பேன்... பிரியமானவர்களிடம் சொல்லி பொலம்புவது....

9. உங்கள் பாதியிடம் உங்களுக்குப் பிடித்த, பிடிக்காத விடயங்கள் என்ன?

இன்னும் அப்படி யாரும் வரலை... வந்தபிறகு சொல்லுறேன்....

10. யார் பக்கத்தில் இல்லாமல் இருப்பதற்காக வருந்துகிறீர்கள்?

என் அம்மாவின் மாமா... என் அருமை தாத்தா... தைரியத்தையும் துணிச்சலையும் பணிவையும், அனைவரையும் அன்பு செய்யும் மனதையும் அவங்கிட்டத்தான் கத்துக்கிட்டேன்....

11. இதை எழுதும்போது என்ன வண்ண ஆடை அணிந்திருக்கிறீர்கள்?

வெள்ளை நிற நீள ஸ்கர்ட்டும், கருப்பு நிற டாப்ஸும்....

12. என்ன பாட்டு கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?

உன்னை சரணடைந்தேன்
உன்னுள்ளே நான் பிறந்தேன்..
என்னில் உறைந்திருந்தேன்..
உன்னுள்ளே நான் கரைந்தேன்
கண்கள்
இமையை விட்டு என்னையே வந்து நிற்க..
ஸ்வாசம் காற்றை விட்டு உன்னையே தேடி செல்ல..
தாயாக மாறிப்போனாயே
வேறாக
தாங்கி நின்றாயே
அயராது ஓடி வந்து
இசையாக நீ இருக்க
கண்ணிருடன் மாயத்திலே
காலமெல்லாம் உப்பைப்போல
உந்தனுள்ளே நானிருப்பேனே..

எனக்கு மிகவும் பிடித்த பாடல்....

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக மாற உங்களுக்கு ஆசை?

கருப்பு வண்ணம்....

14. பிடித்த மணம்?

பிறந்த குழந்தையின் மணம்... மழைக்காலத்தின் முதல் மழைக்குப்பின் வரும் மண்வாசம், மலைப்பிரதேசங்களில் வரும் மூலிகைகள் கலந்த ஈரக்காற்றின் மணம்...பெட்ரோல் மணம்... நெயில்பாலிஷ் வாசம்.....(பொம்பளைப்புள்ளையாச்சே... ;))) இப்படி லிஸ்ட் நீண்டுட்டே போகும்....

15. நீங்கள் அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? ஏன் உங்களுக்கு அவர்களைப் பிடித்து உள்ளது? அவர்களை அழைக்கக் காரணம் என்ன?

என் மேல் அதிகம் அன்பும் அக்கறையும் கொண்ட இணையம் தந்த அன்பான அண்ணன் விஷ்ணு...எனக்கு அறிவுரை சொல்லி ஒரு சிறுக்குழந்தையைப்போல.. தாய் பறவை தன் குஞ்சுகளை காப்பதுப்போல் என்னை காத்து வருகிறார்கள்.....அண்ணாவின் குட்டி குட்டி கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தவை.... அதிர்ந்து பேச தெரியாதவர்... கோபத்தைக்கூட அன்பா மட்டுமே காட்டத்தெரிந்தவர்....


மீறான் அன்வர் என் தம்பி....கூப்பிடலாம்னு இருந்தேன் ஆனா எனக்கு வேலைப்பளு அதிகமானதால தாமதமாச்சு.... தம்பியை நண்பர் கோகுலன் அழைத்துவிட்டார்...


16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு

அக்காவின் அனைத்து பதிவுகளும் எனக்கு பிடிக்கும்....குறிப்பாக தொடர்கதைகளை மிகவும் ரசித்து படிப்பேன்.. சாந்தி அக்காவின் பதிவுகளை படிக்கும் போது எல்லா வித உணர்வுகளும் வரும்.. சிரிப்பு, சந்தோஷம், மனதைரியம், சோகம், நக்கல், நையாண்டி எல்லாம் கலந்த பல்சுவை விருந்து...

17. பிடித்த விளையாட்டு?

கூடைப்பந்து... ஸ்கூல் டேஸ்ல விளையாடியதுண்டு....

சில‌ ச‌ம‌ய‌ம் ச‌மைய‌லும்..:))

18. கண்ணாடி அணிபவரா?

கண்ணாடி போடலாம்னு ஒரு ஆசைல கண்ணு டெஸ்ட் பண்ணுங்க டாக்டர்ன்னு போய் கேட்டும் உன் கண்ணு நல்லாத்தானிருக்குன்னு டாக்டரே துரத்திட்டாங்க...

19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

இயக்குனர் திரு. பாலசந்தரின் அனைத்து படங்களும் பிடிக்கும்... வாழ்கையின் எதார்த்தம் சொல்லும் படங்கள், நகைச்சுவை படங்கள், மென்மையான காத்ல சொல்லும் படங்கள் பிடிக்கும்.....

20. கடைசியாகப் பார்த்த படம்?

வாரணமாயிரம்... எங்கங்க நேரமிருக்கு படம் பார்க்க....

21. பிடித்த பருவகாலம் எது?


மழைக்காலமும், அதை தொடர்ந்து வரும் பனிக்காலமும் மிக மிக பிடிக்கும்....

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?

கலைஞரின் சிறுகதை தொகுப்புகள்...

23. உங்கள் டெக்ஸ்-டொப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு தடவை மாற்றுவீர்கள்?

அட்லீஸ்ட் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை மாற்றுவேன்...வெளியே சென்று காண முடியாத இயற்கை அழகினை டெஸ்க்-டாப்பின் கொண்டு வந்திருவேன்... :)

24. உங்களுக்குப் பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம் -
என்னுடைய அலுவலக ஜன்னலின் குடியிருக்கும் மைனாக்களின் சத்தம்.... காலை நேரங்களில் கூவும் குயிலின் சத்தம்...கடலலைகளின் சத்தம்...கொட்டும் அருவியின் ஓசை....இப்படி லிஸ்ட் நீண்டுட்டே போகும்

பிடிக்காத சத்தம் -
மனதை திடுக்கிட வைக்கும் எந்த சத்தமும் பிடிக்காது.... மனதிற்கு இனியவர்களின் சத்தமேயில்லாத மௌனமும் பிடிக்காது....

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்சத் தொலைவு?

சமீபத்தில் சென்று வந்த கொடைக்கானல் பயணம்....

26. உங்களுக்கு ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

கொஞ்சமா எழுதுவேன்... நிறைய ரசிப்பேன்... இது தனித்திறமையில்லைத்தான்....அதிகமா பொறுமையாயிருப்பேன்.... :) :)

27. உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்?

முன் சிரித்து பின் தூற்றுவது அறவே பிடிக்காது..... சாலையில் எச்சில் உமிழ்பவர்களைக் கண்டாலே எங்கிருந்துதான் கோபம் வருமோ தெரியாது... அப்படி ஒரு கோவம் வரும்... :(

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் ஒரு சாத்தான்?

மனதில் எதையும் மறைத்து வைக்கத்தெரியாது.....

29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?


கடற்கரை கிராமங்கள், மலையும் மலை சார்ந்த அனைத்து இடங்களும்.....

30. எப்படி இருக்கவேண்டுமென்று ஆசை?

நானும் சந்தோஷமாகயிருந்து, என்னை சுற்றியுள்ளவர்களையும் சந்தோஷமாக வைத்திருக்கவே எனக்கு ஆசை...

31.கணவர் இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?

இன்னும் அப்படி ஒரு சந்தர்ப்பம் அமையவில்லை.....அமைந்தால்.. அவர் இல்லாமல் அவருக்காக அவரின் தேவைகளை அவர் கேட்கும் முன்னரே செய்து முடிப்பது.....


32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்கள்.

தடைகளற்ற வாழ்கையில்லை...தடைகளகற்றி வாழ்வதே வாழ்கை.....

:) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :)

Thursday, May 7, 2009

காதலாய் மாறிய‌ நட்பிற்கு த‌ண்ட‌னை....


டேய் இன்னைக்கு சமைக்கும் போது
கையிலே லேசா எண்ணை தெரிச்சுருச்சுடா!!
என்னடி சொல்லுறே கவனமா
சமைக்கக்கூடாதா லூசு டி நீ
டாக்ட‌ர்ட்டே போனியா??
ம‌ருந்து ஏதாவ‌து போட்டியா??

நாள் முழுவ‌தும் உன்னிட‌மிருந்து
அழைப்புமில்லை குறுந்த‌க‌வ‌லுமில்லை
என் ம‌ன‌ம் த‌வித்த‌து..
என்ன‌ ஆச்சு இவ‌னுக்கு?
ஏன் ஏதும் த‌க‌வ‌லில்லை?
நினைக்கும் போதே வந்ததழைப்பு..

சாரி மா இன்னைக்கு கொஞ்ச‌ம் வேலைய‌திக‌ம்
போனும் டாப் அப் ப‌ண்ண‌ல...
நீ வெயிட் ப‌ண்ணுவேத்தெரியும்
எப்ப‌டில்லாம் யாருகிட்ட‌லாம்
பொல‌ம்பிருப்பேன்னுத்தெரியும்
அதான் கூப்பிட்டேன் டி..
இப்படியெல்லாம் பதறியது நட்பு....

நிலவரசி ந‌டுவானில்
ந‌ட்ச‌த்திர‌ தோழிக‌ளோடு
த‌னை க‌வ‌ர்ந்துசெல்ல‌ நினைக்கும்
மேக‌க்காத‌லனைப்ப‌ரிக‌சித்து
விளையாடுமந்த‌
ர‌ம்மிய‌மானத்த‌ருண‌ம‌தில்
என்னிரு க‌ர‌ம் ப‌ற்றி
உந்நெஞ்சோடணைத்து
மென்மையாய் இதழ்ப‌தித்து
என் வாழ்கையினை ஸ்திர‌ப்ப‌டுத்த
நீ விரும்புவதாய் சொன்ன‌
அந்த‌ ஒரு நொடிப்பொழுது வாழ்வின்
துய‌ர்பொழுத‌னைத்தையுமற‌ந்து
உந்தோள் சேர்ந்தேனே....

அத‌ன்பின் நிக‌ழ்ந்த‌வைய‌னைத்தும்
அனுதினமும் எனை வ‌தைக்கிற‌தே
அது ஏனுன‌க்கு புரியாம‌ல் போன‌து???
உந்தோள் சாய்ந்த‌ நொடிக்கிடைத்த‌
இன்ப‌ம் இன்றுமென்னை சுக‌ப்ப‌டுத்துகிற‌து
ஆனாலும் நீ இப்போது எனைவிட்டு
வில‌கி நிற்கும் ஒவ்வொரு நொடியும்
கால‌னின் அவையிலிருக்கும்
எண்ணைக்கொப்ப‌றையிலேயே
முழுவதுமாய் அமிழ்ந்தெடுப்ப‌துப்போல்
வேத‌னைத்த‌ருகிற‌தே...

எண்ணைத்தெரித்த‌த‌ற்கே
துடிதுடித்த‌ நீ.. இன்று
என்னிலைய‌றிந்தும் கைக்க‌ட்டி
வாய்மூடி நிற்கும் கார‌ண‌ம்
தெரியாம‌ல் த‌வித்திருக்கிறேன்
இதுதான் காத‌லாய் மாறிப்போன‌
ந‌ட்பிற்கு த‌ண்ட‌னையோ???


Friday, March 13, 2009

இனிய நட்பே!!


நீ
மறந்துச்சென்றாலும்
உனை நினைக்கத்
தவறுவதில்லை
இந்தப்பாழாய் போன
மனது..
ஏனென்றால்
இது
காதலில்லை
ஆணவங்கொள்ள...
விட்டுக்கொடுக்கத்
தெரிந்த நட்பு!!!

Wednesday, February 25, 2009

தவறென்ன செய்தேன் நான்?


மனமொத்த சினேகிதர்கள் நாம்
விலகி நிற்க நேர்ந்திருக்கிறதின்று
உன்னன்பை,அருகாமையை
இக்கணத்திலும் வேண்டியபடி
என்ன நிகழ்ந்தது நமக்குள்ளென்று
அறியாதிருக்கிறேன் நான்
உனையழைத்திடத் துடித்திடும் என்
விரல்களைத் தடுத்து நிறுத்தியிருக்கிறது
'நான் மட்டும் ஏன்?' எனும் அகந்தை
இன்று தவறாய்ப்போன எல்லாமே
தயக்கங்கங்களேதுமின்றி அழைத்திட்ட நாட்களில்
சரியாகத்தானிருந்தது அன்று
எந்தப்பாதையில் வழிதவறிப்போனது
நம் அன்பு?
வார்த்தைகளில் அனைத்தும் பகிர்ந்திட்ட நீயின்று
நேசம், மொழியறியாதொரு
வேற்றுக்கிரகவாசி ஆனாயோ
தவித்து உருகி எரிந்து
வழிகிறதடா என்னிதயம்
புரிகிறதா உனக்கு
என்ன பேசுகிறோம் என்றில்லாமல்
நாம் உரையாடிக் களித்த நாட்களில்
நட்சத்திரங்கள் கண்சிமிட்ட
மேகங்களுக்குள் ஒளிந்த நிலவு
நடுவானம் வரை நம்மோடு வரும்
புரிதலெனும் மெல்லிய நூலிழை அகன்று
விரிசல் கண்டது நம் நட்பு
ஆறுதலைத் தேடிய துயர்பொழுதுகளில்
தோள் தந்த உன் சினேகம்
வாழ்வின் இறுதி வரை வேண்டுமெனக்கு
என்ன சொல்கிறாய்?
நழுவிய நிமிடத்தின் எந்தக் கணம்
பிரிவை ஏந்தி வந்தது
என் தவறேதென
எண்ணி எண்ணிச் சோர்கின்றன
மனமும், விழிகளும்
விழி மூடித் திறக்கும் கணம்
நீ எதிரில் நிற்பாயெனக் காத்திருக்கிறேன்...

Friday, February 20, 2009

குட்டி குட்டி ஆசைகள்...

அவ்வப்போதாவது
வலிகளெனக்கு
வந்து போகட்டும்
நீ
சொல்லும்
ஆறுதல்களைக்
கேட்பதற்காகவே!!
"சீ போடீ" என்று
நீ சொல்லுவதற்காகவே
இல்லாத காரணங்களை
தேடித்தேடி
வம்பிழுக்கிறேனடா!!

'டீ'
என நீ முடிக்காத
ஒவ்வொரு
வாக்கியமும் என்றுமே
முற்றுப்
பெறுவதில்லையேடா...

Thursday, January 22, 2009

நீ மட்டுமே...என் நினைவுகளில்...

நாள் முழுதும் கழிகிறது
உன்னைப்பற்றிய நினைவுகளால்
மட்டும்!!
பனிக்காற்றின் குளிர்ச்சியில்
இளங்காலை வெப்பத்தில்
வானொலியின் காதல் பாடலில்
அவசரச் சமையலில்
மின்னஞ்சல் வாசிக்கையில்
குறுந்தகவல் சத்தத்தில்
மதிய உணவு நேரத்தில்
ப‌ணிமுடித்துக் கிள‌ம்புகையில்
பேருந்து ப‌ய‌ண‌த்தில்
நட்சத்திரங்களை,நிலவை,வானை ரசிக்கையில்
போர்வையின் மென்மையில்
என் க‌ன‌வில்
என
மறக்க நினைத்தும்
முடியாமல்
என் வாழ்வின்
எல்லாக் கணங்களிலும்
உன்னையே யோசித்தபடி இருக்கையில்
உன் நினைவகற்றி வாழ
ஒரு ம‌ணித்துளிக்கூட‌
‌முடிவ‌தில்லையே என்னுயிரே...