Tuesday, June 12, 2012

மறக்கமுடியா உன் இன்ப நினைவுகளோடு…


நான் விழிக்கும் அதிகாலைகளில்
என்னோடு நீயும் விழிப்பாய்
நான் சமைக்கும் பொழுதுகளில்
என்னோடு நீயும் சமைப்பாய்

நான் அலுவலகம் புறப்படும் அவசரத்திலேயிருக்க
நான் குளித்துவிட்டு வருமுன்
எனக்காக என்னுடை தேய்த்து வைப்பாய்
என்னுடைக்கேற்ற அலங்கார பொருட்கள்
என் மதிய உணவு, கைப்பை முதலெடுத்து வைப்பாய்

நீ பணிக்கு கிளம்பும் அவசரத்திலும்
என்னை பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு
அதனால் தொடர்ந்த உன் அண்ணனின்
திட்டினை அலட்சியப்படுத்தினாய்

மதிய உணவு வேளையில் நீ பாசமாய்
எடுத்து வைத்த வெஜிடபிள் சாலட்டையும்
புதுவிதமாய் செய்த கோவக்காய் வறுவலையும்
நான் சாப்பிட்டேனா என்றறிய அழைப்பாய்

மாலையில் அலுவலகம் விட்டு வரும்பொழுது
பேருந்து நிறுத்தத்தில் எனக்காக காத்திருந்து
வீட்டிற்கு போவதற்குள் எனக்கு பசிக்குமென்று
எனக்கு பிடித்த பழச்சாறு வாங்கி தந்தாய்

இரவு உண‌வு என்னோடு சமைத்து
துணிம‌ணிக‌ள் துவைத்து உல‌ர்த்த‌ உதவினாய்
இர‌வு தூங்கும் முன் பணிச்சுமையால்
க‌ளைத்திருந்த‌ என‌க்கு தலைக்கோதி
கால் பிடித்து, தைலம் தேய்த்து உன்
க‌ர‌த்தில், உன் அணைப்பில் தூங்க வைப்பாய்

என்னை ஒரு குழந்தையாக பாவித்து
என‌க்கு தாயாக நீ இருப்பாய்
இவைய‌ணைத்தும் நான் கேட்காமலே
எனக்கு நீ தந்தாயன்று….
ஆனால் நான் மன்றாடி கேட்டும்
என்னை மறக்க துணிந்தாயின்று…

என் மேல் உன் அண்ண‌ன் சொன்ன
அவ‌தூறுகளை நூறு சதவிகிதம் அவதூறெனத்தெரிந்தும்
எப்படி வெறுக்கமுடிந்ததுன்னாலென்னை?
மறக்கமுடியா உன் இன்ப நினைவுகளோடு…

மாறிப்போச்சு எம்மனசு...




சில வருடங்களுக்கு முன் எழுதியது... இவ்வளவு நாட்களாக Draftல் கிடந்தது... வழக்கமானதாக இல்லாமல் ஒரு வித்தியாசமான முயற்சி....

அஞ்சாறு மாசமுன்னே
நீயாரு நானறியேன்
பொழுதெல்லாம் ஆபிசில்
கம்ப்யூட்டர் முன்னயிருந்து
வேகமாப்போர உலகத்துல
நானுஞ்சேர்ந்து
சோர்ந்து நான் போக‌யிலே..

தெம்மாங்கு பாடிக்கிட்டே
எந்த‌ம்பி எனைப்பார்த்து
மின்க‌டுதாசி வ‌ழியாவ‌ந்த‌
சேக்காளி இவ‌னென‌க்கு
ம‌ன‌சுங்கூட‌ சுத்த‌மிவ‌னுக்கு
என‌ச்சொல்லி உன்னையுந்தான்
என‌க்க‌றிமுக‌ம் செஞ்சுவ‌ச்சான்..

தனிமரமா நீயுந்தான்
கால‌நேர‌ம்
பார்க்காம‌ அப்ப‌னாத்தா
ம‌ன‌ங்குளிர‌ உம்பொறுப்பை
நீ நினைச்சு தூர‌தேச‌த்துல‌
வேலைசெஞ்ச‌...

உந்த‌னிமை நான்போக்க‌
எண்ணி என்னையுந்தான்
உன‌க்க‌ளிச்சேன் மின்க‌டுதாசி
மின்னரட்டை வ‌ழியாவே...

க‌ஷ்ட‌ம் நித்த‌ம் பார்த்த‌
ம‌னசு உம்பேச்சில்
குளிர்ந்தும்தான் போச்சு ராசா
என்னுசுரு இருக்கும்வ‌ரை
உன்னுசுராயிருக்க‌ துடிச்சுத‌ய்யா
இந்த‌ பாழாப்போன‌ ம‌னசு

எங்க‌ஷ்ட‌ம் நாஞ்சொல்ல‌
உங்க‌ஷ்ட‌ம் நீயுஞ்சொல்ல‌
உன்னாசையெல்லாம் நான‌றிய‌
உன்னையுந்தான் நேருல‌ப்பார்க்க‌
இந்த‌ம‌ன‌சு த‌விச்சுத‌ய்யா..

வ‌ந்த‌தொருநாளு உன்னாத்தா
உனைப்பார்க்க ஆசையிலதான்
உனையழைச்சா
பற‌ந்து வந்த உனைப்பார்க்க‌‌
நான்ப்பார்க்க‌ ஓடிவ‌ந்தேன்

நீப்பார்த்த மொத‌ப்பார்வை
எம்ம‌ன‌சு தாங்க‌ல‌ய்யா
எத்த‌னைதான் பேசி சிரிச்சிருந்தாலும்
உம்பார்வை என்வாய‌
ஊசி வச்சு த‌ச்சிருச்சு

நீப்பார்த்துர‌சிக்க‌ நானும்
உடுத்திவ‌ந்த‌ சேலையைத்தான்
நித்த‌ம் கையிலெடுத்தா
உந்நெனைப்புலதான்
க‌ரைஞ்சுபோது எம்ம‌ன‌சு..


காத்திருப்பின் எல்லை...





உனக்கான காத்திருப்புகள்

எந்த ஒரு எல்லைகளுமேயற்றிருந்தன...

நீ மீண்டும் என்னோடிணையும்

நாளுக்காய் நித்தமும் தேடலுடனேயிருந்தேன்..


நாட்கள் கடந்து மாதங்கள் கடந்தன

இந்நாட்களில் எனக்கிருந்த வலிகள்

என் தலையணை மட்டுமே அறியும்

என்னுள்ளிருந்து வந்த கதறல்கள்

என்னை இன்னுமதிகமாய் சோர்வாக்கியது...


எனது வலிகளுக்கு காரணமறியா

என் சொந்தங்கள் மருந்திடுவதாயெண்ணி

என் காத்திருப்புகளுக்கு எல்லையமைத்தனர்

ஆம் இதோ இன்று மீண்டுமொரு பயணம்

என் சொந்தங்களுக்காய்...........


ஆம் உனக்கான காத்திருப்பை விடுத்து

மருந்திட எத்தனித்த ஜீவனுங்களுக்காக

வலிமறைத்து எல்லைத்தாண்டி

செல்கிறேன் என்றாவதொருநாள்

என்னன்பு உனக்கு புரியுமென்ற நம்பிக்கையுடன்....