
டேய் இன்னைக்கு சமைக்கும் போது
கையிலே லேசா எண்ணை தெரிச்சுருச்சுடா!!
என்னடி சொல்லுறே கவனமா
சமைக்கக்கூடாதா லூசு டி நீ
டாக்டர்ட்டே போனியா??
மருந்து ஏதாவது போட்டியா??
நாள் முழுவதும் உன்னிடமிருந்து
அழைப்புமில்லை குறுந்தகவலுமில்லை
என் மனம் தவித்தது..
என்ன ஆச்சு இவனுக்கு?
ஏன் ஏதும் தகவலில்லை?
நினைக்கும் போதே வந்ததழைப்பு..
சாரி மா இன்னைக்கு கொஞ்சம் வேலையதிகம்
போனும் டாப் அப் பண்ணல...
நீ வெயிட் பண்ணுவேத்தெரியும்
எப்படில்லாம் யாருகிட்டலாம்
பொலம்பிருப்பேன்னுத்தெரியும்
அதான் கூப்பிட்டேன் டி..
இப்படியெல்லாம் பதறியது நட்பு....
நிலவரசி நடுவானில்
நட்சத்திர தோழிகளோடு
தனை கவர்ந்துசெல்ல நினைக்கும்
மேகக்காதலனைப்பரிகசித்து
விளையாடுமந்த
ரம்மியமானத்தருணமதில்
என்னிரு கரம் பற்றி
உந்நெஞ்சோடணைத்து
மென்மையாய் இதழ்பதித்து
என் வாழ்கையினை ஸ்திரப்படுத்த
நீ விரும்புவதாய் சொன்ன
அந்த ஒரு நொடிப்பொழுது வாழ்வின்
துயர்பொழுதனைத்தையுமறந்து
உந்தோள் சேர்ந்தேனே....
அதன்பின் நிகழ்ந்தவையனைத்தும்
அனுதினமும் எனை வதைக்கிறதே
அது ஏனுனக்கு புரியாமல் போனது???
உந்தோள் சாய்ந்த நொடிக்கிடைத்த
இன்பம் இன்றுமென்னை சுகப்படுத்துகிறது
ஆனாலும் நீ இப்போது எனைவிட்டு
விலகி நிற்கும் ஒவ்வொரு நொடியும்
காலனின் அவையிலிருக்கும்
எண்ணைக்கொப்பறையிலேயே
முழுவதுமாய் அமிழ்ந்தெடுப்பதுப்போல்
வேதனைத்தருகிறதே...
எண்ணைத்தெரித்ததற்கே
துடிதுடித்த நீ.. இன்று
என்னிலையறிந்தும் கைக்கட்டி
வாய்மூடி நிற்கும் காரணம்
தெரியாமல் தவித்திருக்கிறேன்
இதுதான் காதலாய் மாறிப்போன
நட்பிற்கு தண்டனையோ???