
மனமொத்த சினேகிதர்கள் நாம்
விலகி நிற்க நேர்ந்திருக்கிறதின்று
உன்னன்பை,அருகாமையை
இக்கணத்திலும் வேண்டியபடி
என்ன நிகழ்ந்தது நமக்குள்ளென்று
அறியாதிருக்கிறேன் நான்
உனையழைத்திடத் துடித்திடும் என்
விரல்களைத் தடுத்து நிறுத்தியிருக்கிறது
'நான் மட்டும் ஏன்?' எனும் அகந்தை
இன்று தவறாய்ப்போன எல்லாமே
தயக்கங்கங்களேதுமின்றி அழைத்திட்ட நாட்களில்
சரியாகத்தானிருந்தது அன்று
எந்தப்பாதையில் வழிதவறிப்போனது
நம் அன்பு?
வார்த்தைகளில் அனைத்தும் பகிர்ந்திட்ட நீயின்று
நேசம், மொழியறியாதொரு
வேற்றுக்கிரகவாசி ஆனாயோ
தவித்து உருகி எரிந்து
வழிகிறதடா என்னிதயம்
புரிகிறதா உனக்கு
என்ன பேசுகிறோம் என்றில்லாமல்
நாம் உரையாடிக் களித்த நாட்களில்
நட்சத்திரங்கள் கண்சிமிட்ட
மேகங்களுக்குள் ஒளிந்த நிலவு
நடுவானம் வரை நம்மோடு வரும்
புரிதலெனும் மெல்லிய நூலிழை அகன்று
விரிசல் கண்டது நம் நட்பு
ஆறுதலைத் தேடிய துயர்பொழுதுகளில்
தோள் தந்த உன் சினேகம்
வாழ்வின் இறுதி வரை வேண்டுமெனக்கு
என்ன சொல்கிறாய்?
நழுவிய நிமிடத்தின் எந்தக் கணம்
பிரிவை ஏந்தி வந்தது
என் தவறேதென
எண்ணி எண்ணிச் சோர்கின்றன
மனமும், விழிகளும்
விழி மூடித் திறக்கும் கணம்
நீ எதிரில் நிற்பாயெனக் காத்திருக்கிறேன்...