
நிலவு தாழ்வாயிருந்த அப்பூங்காவில்
குழந்தையின் கண்கள் ஏந்தி
நீ நட்சத்திரங்கள் பொறுக்கச்சென்றாய்
பூக்களுடன் கதைகள் கதைத்தபடியே
நட்சத்திரங்கள் சிதறிவிழும் கைக்கூடையுடன்
நீ திரும்பும் தருணம்தான் அது நிகழ்ந்தது
தூரமாய் தலைவிரித்தாடிக்கொண்டிருந்த
சில தீ நாக்குகள் கக்கிய வெம்மையில்
பிரசவித்த சில பாம்புக்குட்டிகள்
உன் கால்களை சுற்றின
ஆவென அலறி நீ நிலைகுலைந்த தருணம்
தாங்கிப்பிடிக்க எத்தனிப்பின்றி
முகம் திருப்பிக்கொண்டனர்
அங்கு சுயம் விற்றுக்கொண்டிருந்த சிலர்
வழியோரத்தின் சகபயணியாய்
நலம்கேட்டு நட்புக்கரம் நீட்டினேன்
என் தோட்டத்து பூக்களுக்காய்
வர்ணம் சேகரித்துக்கொண்டிருந்த நான்.
உன் சிணுங்கல்களின் சாபத்தில்
பாம்புகள் அனைத்தும் சாம்பலாகிப்போக
உன்மேல் பூக்களாய் கொட்டின
நீ பொறுக்கிய விண்மீன்கள்
உதடுகளின் புன்னகையுடனும்
கண்களின் குவிந்த கள்ளமற்ற நட்புடனும்
மீண்டும் முட்டியிட்டு
நட்சத்திரம் பொறுக்குகினோம் இருவரும்!