மே 24 - இன்று சர்வதேச சகோதரர்கள் தினம்
வழக்கம் போல காலையில் எழுந்து மொபைல் பார்த்த போது வசந்த் அண்ணனிடமிருந்து வந்திருந்த இந்த படம் தான் சொன்னது இன்று சர்வதேச சகோதரர்கள் தினமென்று..
இந்த தினத்தில் எனக்கு என் அண்ணன்கள் குறித்தான சிறு வயது நினைவுகளை பகிரலாம் என எண்ணினேன்..
இது எனது முதல் பிறந்தநாள் புகைப்படம்.. நிச்சயம் என்னோட அண்ணன்கள் என்னை மிக அன்பாக பார்த்துதான் இருப்பார்கள்.. இந்த புகைப்படத்தை பார்க்கும் போதெல்லாம் இப்படியே இருந்திருக்கலாம் என பலமுறை எண்ணி இருக்கிறேன்..
இதுவும் என் ஒரு வயது காலத்துப் புகைப்படமாக இருக்கலாம்.. அண்ணன்கள் இருவரும் தவழ்ந்து மகிழ்ந்த மடியில் நானும்..
நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது எடுத்த புகைப்படம்.. இந்த வயதில் என் அண்ணன்களுடனான உரையாடல்களும், சம்பவங்களும் இன்றும் நீங்கா இடம் பிடித்து இருக்கிறது.. இந்த சமயத்தில் குடும்பத்தில் வறுமை இருந்தாலும் வீட்டில் அன்பிற்கு குறையில்லாமலேயிருந்தது..
நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சமயத்தில் பள்ளியில் மதிய இடைவேளைக்கு பிறகு என் வகுப்புக்கு செல்லாமல் அண்ணன்களில் யாராவது ஒருத்தரின் வகுப்பில் அவர்கள் மடியில் தூங்கிக்கிடந்ததே அதிகம்..
பள்ளிக்கூடம் சென்றது ரிக்ஷாவில்.. பள்ளி சென்று திருப்பும் வரையில் அத்தனை பொறுப்பாக பார்த்துக்கொண்டார்கள்..
தவறுகள் நான் செய்தாலும் அடி வாங்கியது என்னவோ அவர்கள் இருவரும் தான்.. ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது பள்ளிக்கு நடந்து செல்வது வழக்கம்.. என் இரண்டாவது அண்ணன் வசந்த் கதை சொல்லுவதை கேட்பதே ஒரு படம் பார்ப்பது போல் இருக்கும்.. அப்படி கேட்ட கதைகள்.ஆயிரம்..
பெரிய அண்ணா வினோ.. பாசம் அதிகம் உண்டு ஆனால் அப்பாவை போலவே வெளியில் காட்டத்தெரியாது.. வினோ அண்ணாவின் அன்பு கண்டிப்பில் தெரியும்.. அது இன்றளவும் அப்படியேதான்.. என்னதான் கண்டிப்பாக இருந்தாலும் நாங்கள் மூவரும் சில நேரங்களில் கூட்டு களவாணிகள்.. அதுவும் முக்கியமாக அப்பா அம்மா வெளியில் செல்லும் நாட்களில்.. அன்று தான் வசந்த் அண்ணாவின் சமையல் கலையும், வினோ அண்ணாவின் என்ஜினியர் மூளையும் வெளியே வரும்.. இதனால் காலி ஆவது வீட்டில் உள்ள கோதுமை, அரிசி, மைதா மாவுகளும், அம்மாவில் வாட்ச், பழைய ரேடியோ, மற்றும் சில எலக்ட்ரானிக் பொருட்களும் தான்..
எல்லாவற்றிலும் உடந்தையாக இருப்பவளும் நாந்தான், கடைசியில் அப்பாவின் மிரட்டலில் மாட்டிவிடுபவளும் நானேதான்..
இரு அண்ணன்களுமே பள்ளி, கல்லூரி காலங்களில் எங்கே சுற்றுலா சென்றாலும் அவர்களுக்கு செலவு செய்ய கொடுத்த பணத்தில் எனக்கு ஏதாவது வாங்கிவருவதே வழக்கம்.. நாங்கள் மூவரும் எங்கள் போலீஸ் குடியிருப்பில் பலருக்கு முன்மாதிரி பிள்ளைகள்..
வசந்த் அண்ணாவின் பள்ளிச்செல்லும் நேரத்தை பார்த்து தங்கள் வீட்டு கடிகாரத்தில் நேரம் சரி செய்தவர்களும் உண்டு.. வினோ அண்ணாவின் கம்பீரக்குரலே என்னையும் என் தோழிகளையும் எங்கள் குடியிருப்பு இளம் வயது பையன்களின் கண்களில் இருந்து காத்து நின்றது...
அண்ணன்களின் அத்தியாயம் தொடரும்... சொல்ல நிறையவே இருக்கிறது... இது ஒரு முன்னோட்டமே... அண்ணன்கள் சூழ் தங்கையின் வாழ்க்கை என்றுமே இனிமை தான்... அண்ணன்களின் தங்கை என்றுமே அநாதை ஆவது இல்லை..
ஐ லவ் மை பிரதர்ஸ்..